சென்னை உயர்நீதிமன்றம் – கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப் பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்min ஆவணங்களை வேட்பாளருக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த 17-வது சட்டப் பேரவை தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் தொடர்பான ஆவணங்களையும், வேட்புமனு பரிசீலனையின் போது தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்கள் குறித்த ஆவணங்களையும் வழங்கக் கோரி, அந்த தொகுதியில் போட்டியிட்ட மிலானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது விண்ணப்பத்துக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அனைத்து விவரங்களும் ஏற்கனவே பொது வெளியில் வெளியிடப்பட்டு விட்டதாகவும், முடிவுகள் வெளியான 45 நாட்களுக்கு பிறகு உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்காக இந்த ஆவணங்களை கோரியதாகவும், தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் மட்டுமே கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய 45 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் நிராகரிக்கப்படலாம் என்பதாலும் மனுதாரர் கோரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்போது, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் வேட்பு மனு குறித்த ஆவணங்கள் ஏற்கெனவே மனுதாரருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
